திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: ஆய்வு நடத்த கோரிக்கை
திருமங்கலம்: திருமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 15-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி பானைகள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் ரெட்கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் நேற்று திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் இருந்து புளியங்குளம் செல்லும் பாதையில் உள்ள தனது நண்பரின் இடத்தில் உள்ள முட்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றுவதற்கான வேலையை செய்து வந்தார். அப்போது அந்த இடத்தில் வட்டவட்டமாக கருப்பு சிவப்பு பானை ஓடுகள் இருந்ததை பார்த்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். வருவாய் துறையினர் அந்த இடத்தை பார்த்தபோது சிறிதும் பெரிதுமாக 15க்கும் மேற்பட்ட பானைகள் உடைந்த நிலையில் சிதிலம் அடைந்து காணப்பட்டது. அந்த இடம் பழங்கால மக்கள் வசித்தபோது அடக்கம் செய்யும் இடமாக இருந்ததா அல்லது மக்கள் வாழ்ந்த இடமா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகேசன் கூறும்போது : நேற்று காலை இந்த பகுதியில் சுத்தம் செய்வதற்காக வந்தபொழுது வட்ட வட்டமாக பானை போன்று புதைந்து கிடந்ததை பார்த்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். சமீபத்தில் மதுரை கீழடி, கிண்ணிமங்கலம் பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம், தமிழர் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில், இந்த இடத்தையும் தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.