உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சை நிறமாக மாறிய திருத்தணி சரவண பொய்கை!

பச்சை நிறமாக மாறிய திருத்தணி சரவண பொய்கை!

திருத்தணி: முருகன் கோவில் குளமான சரவணப் பொய்கையில் உள்ள தண்ணீர், மூன்று ஆண்டுகளாக  சுத்தம் செய்யாததால்  தற்போது, பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறி  துர்நாற்றம் வீசுகிறது. ஆறுபடை வீடுகளில், ஒன்றான திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். வேண்டுதல் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்து, காவடிகள் எடுத்தும் மலையடிவாரத்திற்கு வருகின்றனர். அங்குள்ள திருக்குளத்தில் (சரவண பொய்கை), புனித நீராடி பக்தர்கள் படிகள் வழியாக நடந்து மலைக் கோவிலுக்கு செல்வர். ஆடிக் கிருத்திகை விழாவின் போது, இத்திருக்குளத்தில் தான் மூன்று நாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

பாசி படர்ந்துள்ளது: திருக்குளத்தில் உள்ள தண்ணீரை, மூன்று ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருந்ததால், தற்போது பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், திருக்குளத்தில் குளிக்காமல் வெறும் காலை மட்டும் கழுவி செல்கின்றனர். மேலும், சில பக்தர்கள் குளத்தில் உள்ள தண்ணீரை பார்த்ததும், கால் கூட கழுவாமல் மலைக் கோவிலுக்கு சென்று, அங்குள்ள குடிநீர் குழாயில் கழுவிக் கொண்டு, மூலவரை தரிசிக்க செல்கின்றனர். மலையடி வாரத்தில் மொட்டை அடிக்கும் பக்தர்கள், சிலர் மட்டும் தவிர்க்க முடியாமல் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு செல்கின்றனர். திருக்குளத்தில் உள்ள தண்ணீரை முழுவதும் எடுத்து, புதிய தண்ணீரை விடும்படி பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து, கோவில் இணை ஆணையர் தனபால் கூறியதாவது: பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக, வெள்ளம், பூமாலை மற்றும் குப்பைகளை போட்டு செல்கின்றனர். பூமாலை மற்றும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு, ஐந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அடிக்கடி, எங்கள் ஊழியர்கள் புடவையின் மூலம் முடிந்தவரை எடுத்து வருகிறோம். சுத்தப்படுத்தப்படும் குளத்தில் அதிகளவில் மீன்குட்டிகள் உள்ளதால், அதை பாதிக்காதவாறு தண்ணீரை சுத்தம் செய்வதற்கு வழிவகைகள் உண்டா என, உயர் அதிகாரிகளிடம் கேட்டு வருகிறேன்.  அப்படி ஏதாவது வழி இருந்தால், உடனடியாக குளத்தில் உள்ள தண்ணீரை சுத்தப்படுத்தப்படும்.  மேலும், குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு, வேறு வழிஉண்டா எனவும் ஆலோசனை செய்து வருகிறோம் இவ்வாறு  தனபால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !