குலசேகரன்பட்டணத்தில் தாரை, தப்பட்டையுடன் குவிந்த பக்தர்கள்
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நாளை(6ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தசரா திருவிழாவையொட்டி கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக தசரா திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முதல் நாளே பக்தர்கள் அதிகளவில் கடற்கரையில், தங்கி சுவாமி தரிசனம் செய்யகாத்து கிடப்பர். இதன் காரணமாக பக்தர்களுக்கு இன்றும், நாளையும் அனுமதி கிடையாது என வதந்தி பரவியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், டூவிலர்களில் குவிந்தனர். தசரா குழுக்கள்அமைப்பவர்கள் தங்கள் தசரா பிறைகளில் வைத்து சுவாமி கும்பிட குலசேகரன்பட்டணம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனிதநீர் எடுக்க தாரை, தப்பட்டையுடன் குவிந்தனர். அப்போது கடற்கரையிலேயே மணலால் பீடங்கள்அமைத்து கும்பம் வைத்து புனித நீரை வைத்து பெண்கள் குலவையிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோயில் வழியாக முத்தாரம்மன் கோயில் வந்து சுவாமி தரிசனத்திற்குப் பின் தங்கள்பகுதிகளுக்கு சென்றனர். குலசேகரன்பட்டணத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கடற்கரை, மெயின் பஜார், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.