உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்?

கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்?

மதுரை : கடைகள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதித்துள்ளபோது கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருநெல்வேலி கோவில் திருவிழாவிற்கு அனுமதி கோரிய மனுவை, அரசு பரிசீலிக்க உத்தரவிட்டது.திருநெல்வேலியைச் சேர்ந்த லட்சுமணன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி, மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். அம்பாள் கோவிலில் சப்பரம் வீதி உலா துவங்கி, நெல்லையப்பர் கோவில் நான்கு ரத வீதி வழியாக சென்று, மீண்டும் கோவிலுக்கு வந்து சேரும்.கடந்த 2020ல் உயர் நீதிமன்ற அனுமதியுடன், சாலியர் தெருவில் சப்பர ஊர்வலம் நடந்தது. தற்போது, தசரா திருவிழா துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அக்., 15ல் சப்பர ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அனுமதி கோரி திருநெல்வேலி கலெக்டர், தாசில்தாருக்கு மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார். நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, கடைகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன். அரசுத் தரப்பில் மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !