வடபழநி ஆண்டவர் கோவிலில் பாலாலயம்
சென்னை :வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக,மூலவர் சன்னிதி உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் நடைபெற்றது.
மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை, அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப் பலகையின் மீது மாற்றி, அந்த பலகையை கோவில் வளாகத்திற்குள் தனி இடத்தில் வைத்து, அங்கே நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்வர்.
அதன் பின், மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு பணியாட்கள் உள்ளே செல்வர். இவ்வாறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை, அத்திப் பலகையின் மீதோ, உற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகிற நிகழ்வை, பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று சொல்வர். வடபழநி ஆண்டவர் கோவிலில் ஏற்கனவே கோபுரங்கள், விமானங்களுக்கு பாலாலயம் நடந்து முடிந்து கும்பாபிஷேக பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் நடைபெற்று உள்ளது. இனி மூலவர் சன்னிதிக்கும், பலி பீடத்திற்கும் மட்டுமே பாலாலயம் நடைபெற வேண்டியுள்ளது. அது, கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடைபெறும். தற்போது உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்காக நடைபெற்ற பாலாலயத்திற்காக யாகசாலை அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்களுடன் கோவிலை வலம் வந்த அர்ச்சகர்கள், பின்னர் தங்க ரத மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலாலய மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பாக வழிபாடு செய்தனர். விழாவில், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தி.நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, கோவில் துணை ஆணையர் பொறுப்பு சி.லட்சுமணன், சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிபிரியா, ஆய்வு அதிகாரிகள் பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன் ஆகியோர்பங்கேற்றனர்.