குருதோஷம் இனியில்லை
ADDED :1462 days ago
சூரனுடன் போர் புரியும் முன்பாக அசுரர்களை பற்றிய வரலாறை அறிய முருகன் விரும்பினார். அதற்காக திருச்செந்துாருக்கு வந்த தேவகுருவான பிரகஸ்பதி முருகனுக்கு எடுத்துரைத்தார். இதனடிப்படையில் இத்தலம் ‘குரு தலம்’ எனப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் குருநாதர் வடிவில் இருந்து அருள்புரிகிறார். கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை ஆகியவற்றை ஆசனமாக்கி அதன் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தின் மீது வேதங்களே கிளிகளாக உள்ளன. அறிவு, ஞானம் தரும் இவரை ‘ஞான மூர்த்தி’ என்பர். திருச்செந்துார் முருகன் ஞானகுருவாக அருள்புரிகிறார். வியாழக்கிழமையில் திருச்செந்துார் முருகனை வழிபட்டால் குருதோஷம் விலகும்.