உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் பக்தர்கள் ஆரவாரம் இன்றி சூரனை வதம் செய்தார் சுவாமி

திருச்செந்தூரில் பக்தர்கள் ஆரவாரம் இன்றி சூரனை வதம் செய்தார் சுவாமி

திருச்செந்துார்: ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்களின்றி நடந்து முடிந்தது.
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை1:00 மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் நடந்தன.

யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை ஆனதும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. கோயிலில் மூலவருக்கு காலை9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி 108 வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 2:30 மணிக்கு சூரபத்மன் சிவன் கோயிலிருந்து நேரடியாக கோயில் கடற்கரைக்கு புறப்பட்டான். மாலை 5 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. முதலில் கஜமுக சூரன் முருகப்பெருமானுடன் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் தனது வெற்றி வேலால் சரியாக 5.13மணிக்கு வீழ்த்தினார். அதனை தொடர்ந்து சிங்கமுகமாக உருவெடுத்து சுவாமி ஜெயந்திநாதரிடம் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. மாலை5.22 மணிக்கு தனது வெற்றி வேலால் சிங்கமுக சூரனைவென்றார். மூன்றாவது சூரன் தனது சுயரூபத்துடன் சூரபத்மனாக மாறி சுவாமி ஜெயந்திநாதரிடம் போர் புரிந்தான். மாலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார். பின்னர் சேவல் மாமரமாக மாறி சுவாமி ஜெயந்திநாதரிடம் போர் செய்தான். கருணை கடவுளான செந்திலாண்டவர்சூரனை சேவலாகவும், மாமரமாகவும் தனக்குள் ஆட்கொண்டார். ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் சூரசம்ஹாரம் விழா நிறைவு பெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளியதும் சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி பிம்பத்தில் நிழல் அபிஷேகம் நடந்தது.சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வில்லை. ஏற்பாடுகளைகோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணைஆணையர்(பொறுப்பு) குமரதுரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !