செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சூலூர்: செங்கத்துறை மாகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த செங்கத்துறையில் உள்ள விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு கோபுரங்கள் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 9 ம்தேதி காலை, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரு கால ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினர். முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்று வழிபட்டனர்.