காவிரி துலா கட்டத்தில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தீர்த்தவாரி
மயிலாடுதுறை: துலா உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவாக 63 நாயன்மார்கள் தீர்த்தவாரி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை, காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் புனிதநீராடினர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்மவனம்(மயிலாடுதுறை). அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரிரி கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் என்பது ஐதீகம்.
இதனை நினைவுக்கூறும் வகையில் ஐப்பசி 1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி 30ம் தேதி துலா உற்சவம் (கடைமுக தீர்த்தவாரி) சிறப்பாக நடப்பது வழக்கம். அதேபேல் இவ்வாண்டு துலா மாத பிறப்பு தீர்த்தவாரி விழா கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி துலா உற்சவம் அதற்கான கொடியேற்று விழா மயூரநாதர் கோவிலில் நடைபெற்றது விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான மயூரநாதர் கோவில் உள்ளே அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமர கட்டளையில் இருந்து அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவாக புறப்பட்டு காவிரி துலா கட்டத்தில் எழுந்தருளினர் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது அதனை அடுத்து அறுபத்தி மூன்று நாயன்மார்களுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.