திருவிழாவில் கடை வைப்போர் நெகடிவ் அறிக்கை வைத்திருப்பது கட்டாயம்
பெங்களூரு:கடலைக்காய் திருவிழாவில் கடை வைப்போர், கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் அறிக்கை வைத்திருப்பது கட்டாயம். இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெங்களூரு பசவனகுடியின், புல் டெம்பிள் சாலையில், பெரிய கணபதி கோவில் வளாகத்தில், கன்னட கார்த்திகை மாதத்தின், இறுதி திங்கட் கிழமை முதல் மூன்று நாட்கள் கடலைக்காய் திருவிழா நடப்பது வழக்கம்.இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவால் கோவில் வளாகத்தில் மட்டும் எளிமையாக நடந்தது. வரும் 29 முதல், மூன்று நாட்கள் நடக்கவுள்ளது. இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா கூறியதாவது:ஒரு சம்பிரதாயப்படி கடலைக்காய் திருவிழா நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதில் கடை வைப்போர், கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் அறிக்கை வைத்திருப்பது கட்டாயம். இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.
திருவிழாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, வியாபாரிகள் கடை வைக்க துவங்குவர். ஒரு கி.மீ., தொலைவில் மக்கள் நெரிசலை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்றாலும், கடை வைக்கு அனைவரும், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.மாநகராட்சி நிர்ணயித்த இடத்திலேயே, வியாபாரிகள் கடை வைக்க வேண்டும். வேறு இடத்தில் வைக்கக் கூடாது. நடப்பாண்டு கெம்பாம்புதி ஏரியில், தெப்போற்சவம், நரசிம்ம சுவாமி பூங்காவில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுக்கு பின், கடலைக்காய் திருவிழா நடப்பதால், அதிக மக்கள் குவியும் வாய்ப்பு உள்ளது. முக கவசம் அணியாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மார்ஷல்கள் நியமிக்கப்படுவர். இங்கு வருவோரின் பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.