மருதமலையில் லிப்ட் அமைக்க தொடரும் இழுபறி
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், லிப்ட் அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மருதமலை அடிவாரத்தில் இருந்து, மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல, படிக்கட்டு பாதை மற்றும் 2.4 கி.மீ., தொலைவிற்கு தார் சாலை உள்ளது. மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, 90 படிக்கட்டுகளை கடந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், மருதமலையில் ரோப்கார் அமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து, மருதமலையில் நடத்திய ஆய்வில், ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என, ஆய்வு குழு தெரிவித்தது. இதனை அடுத்து, கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, கோவிலுக்கு, செல்ல லிப்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போதைய, அ.தி.மு.க., அரசு, லிப்ட் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. திட்ட வரைபடம் தயார், 3.40 கோடி மதிப்பில், லிப்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டது. கடந்த பிப்ரவரி, 8ம் தேதி, மருதமலை ராஜகோபுரத்தின் வலது பக்கத்தில், லிப்ட் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், கொரோனா தொற்று காரணமாகவும், ஆட்சி மாற்றத்தாலும், லிப்ட் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தார். அப்போது லிப்ட் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்த பின், இத்திட்டத்தில், பல மாற்றங்கள் செய்ய வேண்டுமென கூறினார். அதன்பின், பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், மீண்டும் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின், பணிகள் துவங்கப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை, லிப்ட் அமைக்கும் பணிகளில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்," ஒரு கோடி மதிப்பிற்கு கீழுள்ள, பணிகளுக்கு மட்டுமே இங்கு ஒப்புதல் வழங்க முடியும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள பணிகளுக்கு, அறநிலையத்துறை கமிஷனர் தலைமையிலான, திட்ட குழுவினரே ஒப்புதல் வழங்க முடியும். இந்த திட்ட குழு, விரைவில், டெண்டர் குறித்து அறிவிக்கும்,"என்றார்.