15 நாட்களில் ரூ.10 கோடி கோவில்களில் வாடகை வசூல்
சென்னை:”அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,492 கோவில்களில், இணையதள வாடகை வசூல் மையங்கள் வாயிலாக, 15 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது,” என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, சவுகார்பேட்டை அருணாசலேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் பொது வசூல் மையத்தை, நேற்று துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:கடந்த மாதம் 8ம் தேதி 5,720 கோவில்களில், இணையதளம் வாயிலாக வாடகை பெறும் வசதி துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, 1,492 கோவில்கள் வாயிலாக, 15 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக வாடகை, குத்தகை செலுத்த இயலாதவர்கள், கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். வாடகை வசூல் மையம் இல்லாத கோவில்களுக்கான வாடகையை, அருகே பெரிய கோவில்களில் உள்ள வசூல் மையத்தில், டி.டி.,யாக செலுத்தலாம்.அனைத்து கோவில்களிலும் உள்ள அசையா சொத்துக்கள், மூன்று மாதங்களில் ஏலம், குத்தகைக்கு விட்டு, வருவாய் ஈட்டும் வகையில் மாற்றப்படும். முறையாக பணம் செலுத்தாதோரின் விபரங்களை அறிந்து, நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட நியாய வாடகை நிர்ணய குழு ஆய்வு செய்து அளித்த ஒப்புதல்படி, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும், 15 சதவீத வாடகை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது.வாடகை அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன. வாடகை நிர்ணய குழுவை மாற்றியமைத்து, நியாயமான வாடகை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோவில் நிலங்களில் குடியிருப்போர், தங்களது வீடுகளை பழுது பார்க்க, அந்தந்த கோவில் அலுவலரிடம் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று கொள்ளலாம். அறநிலையத் துறை கல்லுாரிகளில் ஆன்மீக வகுப்புகள் நடத்த, உயர் கல்வித் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க, பத்திரிகைகளில் உரிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.