காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்தோத்திரபாதம் யார் பாட வேண்டும்?
சென்னை : காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், மோகினி அலங்கார நிகழ்ச்சியின் போது, ஸ்தோத்திரபாதம் பாட தென்கலை ஸ்தோத்திரபாத கோஷ்டியை அனுமதிக்க கோரிய மனு மீது, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ரங்கநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு:நான் தென்கலை பிரிவைச் சேர்ந்தவன்; சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில், மோகினி அலங்கார நிகழ்ச்சி நடக்கும். அப்போது, தென்கலை ஸ்தோத்திரபாத கோஷ்டியினர், ஸ்தோத்திரபாதம் பாடுவது, பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு, தத்தாச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஸ்தோத்திரபாதத்தை, தாங்கள் தான் பாட வேண்டும் என்கின்றனர்.எனவே, தென்கலையினர் ஸ்தோத்திரபாதம் பாட ஏற்பாடு செய்யும்படி, தேவராஜசாமி கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:உரிய ஆவணங்கள், தகவல்களுடன், 2018 மே மாதம் அனுப்பிய மனுக்களின் நகலை, இரண்டு வாரங்களுக்குள் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு, மனுதாரர் அனுப்ப வேண்டும்.அதை பெற்ற பின், மனுதாரர், கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் தத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா செயலருக்கு, விசாரணை தேதி குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அனைத்து தரப்பினரையும் கேட்டு, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, இந்த பிரச்னையில் ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் முடிவெடுக்க வேண்டும்.மூன்று மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.