திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் தலா 20 ஆயிரம் பேர் கிரிவலம் செல்ல அனுமதி
சென்னை:திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும், நாளையும், தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. திருவண்ணாமலையில், இன்று நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், போதிய அளவில் மருத்துவம், தீ அணைப்பு, மின் வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்களை ஈடுபடுத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகினர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.துரைபாண்டி ஆஜராகி, திருவண்ணாமலை கிரிவலத்துக்கு, தினமும் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேரை, இரண்டு நாட்களுக்கு அனுமதிக்க வேண்டும், என்றார்.
அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 20 ஆயிரம் பேரை அனுமதிப்பதாக அறிவித்தால், லட்சக்கணக்கில் திரண்டு விடுவர். கொரோனா வழிகாட்டு நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கணகாணிக்க முடியாது. இதனால், கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்து, சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லாவற்றுக்கும் அரசு அனுமதி அளித்திருப்பதாகவும், தரிசனத்துக்கு மட்டும் 13 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிரிவலம் செல்ல 19 மற்றும் 20ம் தேதிகளில், தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படியும் கோரப்பட்டது. நவ., 7 முதல் 17 வரை தினசரி 13 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதை கருதி, இரண்டு நாட்களிலும் தினசரி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க, அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
எனவே, கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன:* திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5,000 பேர்; மற்ற மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் என, தலா 20 ஆயிரம் பேரை கிரிவலம் செல்ல, இன்றும், நாளையும் நாட்களுக்கு அனுமதிக்க வேண்டும்
* ஆன்லைன் வாயிலாக பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் டிக்கெட்டை சமர்பித்தால் தான், அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை, பக்தர்கள் அளிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடைமுறையை, பக்தர்கள் பின்பற்ற வேண்டும்
* பக்தர்கள், மலை ஏறக்கூடாது. கிரிவலம் செல்பவர்கள், இடையூறின்றி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
* கட்டளைதாரர்கள் 300 பேரை, இன்றும், நாளையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். கிரிவலப் பாதையில் உரிய மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும். பக்தர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது
* கார்த்திகை தீப விழாவின் போது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்த வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அடிக்கடி கை கழுவுதற்கு வசதி செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.