உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிங்கிரி மலையில் தடையை மீறி பக்தர்கள் மலையேற்றம்

வெள்ளிங்கிரி மலையில் தடையை மீறி பக்தர்கள் மலையேற்றம்

 தொண்டாமுத்தூர்: கோவை, பூண்டி வெள்ளிங்கிரி மலையில், வனத்துறையினரின் தடையை மீறி, கேட்டை உடைத்து பக்தர்கள் மலை ஏறினர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரின் ஏழாவது மலையின் உச்சியில் சுயம்பு வடிவிலான சிவலிங்கம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிப்., முதல் மே வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி வழங்குகின்றனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருநாளான நேற்று, மலை ஏறுவதற்காக அதிகாலை, 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். அவர்களை, மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறி வனத்துறையினர் தடுத்தனர்.

இதற்கு, கார்த்திகை தீபத்தன்று, பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த பாரம்பரியத்தை, தடுக்கூடாது. எனவே, எங்களை அனுமதிக்க வேண்டுமென, பக்தர்கள் தெரிவித்தனர். பக்தர்களை மலையேற அனுமதி இல்லை என, வனத்துறையினர் தெரிவித்ததால், வனத்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காலை, 10:00 மணிக்கு, சம்பவ இடத்திற்கு, பேரூர் டி.எஸ்.பி., திருமால், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணன் ஆகியோர் நேரில் வந்து, பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது கோவைக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வனப்பகுதியில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது மலையேற கோர்ட் தடை விதித்துள்ளது எனவும், வனத்துறையினரும், போலீசாரும் எடுத்துரைத்தனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், பக்தர்களும், இந்து முன்னணியினரும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்னரும், போலீசாருடனும், வனத்துறையினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததால், காலை, 11:40 மணிக்கு, பக்தர்கள், தடையை மீறி, அடிவாரத்தில் இருந்த கேட்டை உடைத்து, மலை ஏறினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !