பாரம்பரிய பொலிவை இழந்த கூடலழகர் கோயில் தெப்பம்
மதுரை : மதுரை டவுன்ஹால் ரோடு கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பாரம்பரிய பொலிவை இழந்து குடிமகன்களின் திறந்தவெளி பாராக மாறியுள்ளது.
இத்தெப்பக்குளம் இருப்பது தெரியாதளவிற்கு நான்கு பக்கமும் கடைகள் ஆக்கிரமித்துஉள்ளன. சுற்றியுள்ள கடைகள், பிற கட்டுமானங்களிலிருந்து சேரும் கழிவுநீர் குளத்தில் விடப்பட்டுள்ளதால் துர் நாற்றம் வீசுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் குளத்தை சுற்றி உள்ள கடைகளை அகற்ற, கழிவு நீர் கலப்பதை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகள் இல்லாததால் தெப்பக்குளம் அழியும் நிலையில் உள்ளது.கரையில் குவிந்துள்ள கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட குப்பையால் பாரம்பரிய ஆன்மிக சின்னம் சிதைந்து வருகிறது. செடி, கொடிகள் வளர்ந்துள்ள மைய மண்டபத்தில் குடிமகன்கள் கும்மாளம் போடுகிறார்கள். குளத்திற்கு நீர் வரும் வழித்தடங்கள் மாயமானதால் வறண்டுள்ளது.குளத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றி, மைய மண்டபத்தை புனரமைத்து நீர் தேக்க அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.