சபரிமலையில் குறிப்பிட்ட நேரம் தங்குவதற்கு அறை திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டம்
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரம் தங்குவதற்கும், நீலிமலை பாதை வழியாக அவர்களை அனுமதிப்பது பற்றியும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தங்க அனுமதி வழங்கப் படவில்லை. தரிசனம் முடிந்தவர்கள் உடனடியாக நிலக்கல் திரும்பி விட வேணடும். இதனால் இரவு நேரங்களில் சன்னிதானம் வெறிச்சோடி விடுகிறது. பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படாததால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயாராக வில்லை. சன்னிதானத்தில் 30 கோடி ரூபாய்க்கு கடைகள் ஏலம் போக வேண்டும். ஆனால் தற்போது பத்து கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போயுள்ளது.இதனால் குறிப்பிட்ட நேரத்திலாவது பக்தர்களை தங்க அனுமதிப்பது பற்றி தேவசம்போர்டு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இரவு 9:00 மணிக்கு பின்னர் வரும் பக்தர்களுக்கு ஐந்து மணி நேரம் அறைகள் வழங்குவது, அவர்கள் செக்-அவுட் செய்ததும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது, அறைகளில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் தேவசம்போர்டு பரிசீலனையில் உள்ளது. அறைகள் அனுமதிக்கப்பட்டால் கடைகள் முழுமையாக ஏலம் போகும் என்று தேவசம்போர்டு நம்புகிறது. இதுபோல பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாரம்பரிய பாதையான நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், சரங்குத்தி வழியாக தற்போது பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இதனால் அப்பச்சி மேட்டில் மாவு உருண்டை எறிதல், சபரி பீடத்தில் வெடிவழிபாடு நடத்துதல், சரங்குத்தியில் சரக்கோல் ஊன்றுதல் போன்ற சடங்குகளை பக்தர்களால் செய்ய முடியவில்லை.
இதனால் வரும் நாட்களில் இந்த பாதையில் பக்தர்களை அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கப் பட்டு வருகிறது.இதற்காக இந்த பாதையில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நீலிமலை மற்றும் அப்பாச்சிமேட்டில் உள்ள இதயநோய் சிகிச்சை மையங்கள் செயல்படும் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.நாளை தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடை பெறும் கூட்டத்தில் இந்த விஷயங்கள் உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் பற்றி முடிவு எட்டப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.