வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்: மூன்று வகை கட்டணங்களில் ஏற்பாடு
சபரிமலை: திருவிதாங்கூர் தேவசம்போர்டுடன் இணைந்து தபால் துறை, சபரிமலை பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
மூன்று வகை கட்டணங்களில் இது அனுப்பப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு ஆறுதலாக சபரிமலை பிரசாதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அரவணை மற்றும் அர்ச்சனை பிரசாதம் ரூ.450, நான்கு அரவணை, அர்ச்சனை பிரசாதம் ரூ.830, பத்து டின் அரவணை அடங்கிய பாக்கெட் ரூ.1510 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுவாமி பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் பக்தர்கள் பிரசாதம் பதிவு செய்யலாம். சன்னிதானம் தபால் அலுவலக அதிகாரிகள் தினமும் வரும் ஆர்டருக்கு ஏற்ப அரவணை மற்றும் பிரசாதம் பெற்று டிராக்டர் மூலம் பம்பை கொண்டு வருகின்றனர்.
பின்னர் இது திருவல்லா ஆர்.எம்.எஸ். அலுவலகத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது.தயாராகும் அறைகள் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சன்னிதானத்தில் உள்ள தேவசம்போர்டு கட்டடங்களில் உள்ள 500 அறைகளை நேற்று துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர். பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்படும். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட உள்ளது.
இதனால் மாலைக்கு பின்னர் வருவோர் சன்னிதானத்தில் தங்கலாம்.வெடி வழிபாடு சபரிமலையில் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் வெடிவழிபாடு தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலை 4:00 முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை வெடிவழிபாடு நடத்தலாம்.