உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், நீதிமன்ற உத்தரவுப்படி 37 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் காலி இடம், மதுரை பொன்மேனியில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை, மாடுகளை கட்டி அப்பகுதியினர் ஆக்கிரமித்தனர்; நாளடைவில் சிலர் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தனர். இடத்தை மீட்க, கோவில் தரப்பில் 1984ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 37 ஆண்டுகளாக நடந்த வழக்கில், கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர்; அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. செல்லதுரை கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நேற்று கோவில் இடம் முழுமையாக மீட்கப்பட்டது; அதன் இன்றைய மதிப்பு 10 கோடி ரூபாய், என்றார்.

ரூ.25 லட்சத்துக்கு ஏலம்: ஹிந்து அறநிலையத் துறை உத்தரவுப்படி, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சிலத்துார் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை அளவீடு செய்து, சாகுபடிதாரர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. பின், இந்த நிலங்களை குத்தகை விடுவதற்கான பொது ஏலம், பாஸ்கரேஸ்வரர் சுவாமி கோவிலில் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்தது. ஏலத்தில், 800க்கும் அதிகமான சாகுபடிதாரர்கள் பங்கேற்று குத்தகைக்கு எடுத்தனர். கோவிலுக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !