உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாம்பழத்துறை புஷ்கலாதேவி

மாம்பழத்துறை புஷ்கலாதேவி


தர்ம சாஸ்தாவான ஐயப்பனுடன் ஐக்கியமான புஷ்கலாதேவி கேரள மாநிலம் ஆரியங்காவு அருகிலுள்ள மாம்பழத்துறையில் குடிகொண்டிருக்கிறாள். இவளை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
புஷ்கலாதேவியை திருமணம் புரிந்த தர்மசாஸ்தா ஆரியன்காவு வனப்பகுதியில் தங்கியிருந்தார். ஒரு நாள் இரவு தங்கியிருந்த இடத்திற்கு வெளியே பயமுறுத்தும் விதத்தில் சப்தம் கேட்டது. அச்சம் அடைந்த புஷ்கலாதேவியிடம்,“பயப்படாதே. வனப்பகுதியில் வேட்டைக்காக புலி செல்கிறது” என்றார் சாஸ்தா. “அது எப்படி இங்கிருந்தே உங்களால் புலி செல்வதை தெரிந்து கொண்டீர்கள்” எனக் கேட்டாள். தான் ஒரு தெய்வப்பிறவி என்பதால் உணர்ந்ததாக தெரிவித்தார் சாஸ்தா. அப்போது அவரது மனதிற்குள் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதற்காக தந்திரியை அழைத்து, ‘‘நான் புஷ்கலாதேவியின் பக்தியை ஏற்று முக்தியளிக்க முடிவு செய்து விட்டேன். அதனால் அடர்ந்த வனப்பகுதியில் ஓரிடத்தை தேர்வு செய்து அவளை நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டார். மறுநாள் தந்திரி அடர்ந்த வனப்பகுதிக்குள் புஷ்கலாதேவியை அழைத்து சென்றார். செல்லும் வழியெங்கும் சாஸ்தாவின் அவதார நோக்கத்தையும், அவரது பெருமைகளை விளக்கினார். தந்திரி முன் செல்ல அவரை பின்தொடர்ந்து மனம் மயங்கிய நிலையில் புஷ்கலாதேவியும் நடந்தார். மாம்பழத்துறையை அடைந்ததும் அங்குள்ள மண்டபத்திற்குள் புஷ்கலாதேவி உள்ளே சென்றதும் வெளியே கதவைத் தாழிட்டார். அதிர்ச்சியில் அவள் கூக்குரலிட்டாள். சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்த போது காளியின் வடிவில் உக்கிர கோலத்தில் புஷ்கலாதேவி இருப்பதைக் கண்டார்.
அவளிடம், “தெய்வப்பிறவியான சாஸ்தாவின் காவல் பணிக்கு உன்னால் தடை, தாமதம் ஏற்படக் கூடாது என்பதால் இங்கு அழைத்து வந்தேன், அவர் மனப்பூர்வமாக உன்னை ஏற்றுக் கொண்டதால், சூரியன், சந்திரன் உள்ள வரை ஆரியங்காவில் சாஸ்தாவுடன் திருமண வைபவம் நடக்கும்” என்று வாக்களித்தார். ஒவ்வொரு ஆண்டும் புஷ்கலா தேவிக்கு சவுராஷ்டிரா சமூகத்தினர் மரபுப்படி விழா நடக்கிறது.
கருவறையில் பகவதி அம்மனாக புஷ்கலாதேவி இருக்கிறாள். விநாயகர், நாகர், கருப்பசாமி, சிவபெருமான் இசக்கி அம்மன் சன்னதிகள் உள்ளன. கோயில் எதிரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது. அருகில் கல்லடை ஆறு ஓடுகிறது. தர்மசாஸ்தாவின் படை வீடுகளான ஆரியங்காவு, அச்சன்கோயில், குளத்துப்புழை, சபரிமலை கோயில்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளன. இவற்றின் நடுவில் மாம்பழத்துறை உள்ளது.
ஆரியங்காவில் ஆண்டு தோறும் மார்கழியில் சவுராஷ்டிரா சமூகத்தினர், திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சாஸ்தா புஷ்கலாதேவி திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக மாம்பழத்துறை கோயிலில் கார்த்திகை1ல் அணையாதீபம் ஏற்றுவர். அத்தீபம் ஆரியங்காவுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். இத்தீபம் புஷ்கலா தேவியாக கருதப்படுகிறது. ஆரியங்காவில் ஏற்றப்படும் அணையாதீபத்தில் அதனை சேர்ப்பர். அதன்பின் பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்தம், திருமண வைபவம் நடைபெறும். 12 ஆண்டுக்கு ஒருமுறை இங்கு தேவ பிரசன்னம் பார்க்கப்படும். விழாவில் தேவிக்கு கலசாபிஷேகம், பொங்கலிட்டு வழிபடுவர். இவரை தரிசித்தால் நல்ல மணவாழ்வு கிடைக்கும்.    
எப்படி செல்வது: மதுரை –  கொல்லம் சாலையில் 175 கி.மீ., துாரத்தில் ஆரியங்காவு. இங்கிருந்து 20 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 9:00 மணி, மாலை 5:00 –  7:00 மணி
தொடர்புக்கு: 0475 –  202 7612
அருகிலுள்ள தலம்: ஆரியன்காவு ஐயப்பன் கோயில்(20 கி.மீ.,)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !