சபரிமலையில் மாஸ்டர் பிளான் அமலாகிறது: அடுத்த சீசனுக்குள் முடிக்க திட்டம்
சபரிமலை : சபரிமலையில் மாஸ்டர் பிளான்படி பணிகள் தொடங்கப்படுகிறது. சன்னிதானத்தை சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு அடுத்த சீசனுக்கு முன் மாற்று இடத்தில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
சபரிமலையில் அடுத்துவரும் 100 ஆண்டுகளை கருத்தில் கொண்டு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தை சுற்றியுள்ள தந்திரி, மேல்சாந்தி அறைகள், நிர்வாக அலுவலக கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும். புதிய பிரசாத மண்டபம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பணிகளை துரிதப்படுத்த கேரள அரசும், தேவசம்போர்டும் முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போதுள்ள வெள்ளைசோறு வழங்கும் கட்டடத்தின் முன்புறம் புதிய பிரசாத மண்டபம் அமைகிறது. இந்த பணி தொடங்கும் போது தற்போதுள்ள பிரசாத கவுண்டரில் பிரசாதம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதால் தற்காலிக மாற்று இடம் தேர்வாகும். தரிசனத்துக்கு பின்னர் பாண்டித்தாவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பக்தர்கள் மீண்டும் சன்னிதானம் பக்கம் வராமல் தடுக்கும் வகையில் பெய்லி பாலத்தின் மேற்பகுதியில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. இது போல மேல்சாந்தி, தந்திரி அறைகள் இடிக்கப்பட்டு மாற்று இடத்தில் அவர்களுக்கு கட்டடம் கட்டப்படும். இந்த பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் நாளை பம்பையில் மாஸ்டர் பிளான் கமிட்டி கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சபரிமலையில் 12.675 எக்டேர், நிலக்கல்லில் 110.524 எக்டேர் நிலம் தேவசம்போர்டுக்கு சொந்தமாக உள்ளதால் மாஸ்டர் பிளான் செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.