உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவக்கம்

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவக்கம்

சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதற்காக மூலவர், உற்சவர், மற்றும் ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் திருமேனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலையில் திருமங்கை மன்னன் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்ற பாசுரத்தை பிரபந்த கோஷ்டியார்கள் பாராயணம் செய்து வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். இதனையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று முதல் பகல்பத்து உற்சவம் துவங்கவுள்ளது. ஜன.,12ல் நாச்சியார் திருக்கோலம் என்ற மோகினி அலங்காரத்தில் பெருமாள் தரிசனம் அளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும், 13 அதிகாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அன்றிரவு முதல் ராப்பத்து உற்சவம் துவங்கி பத்து நாட்கள் நடக்கும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், உற்சவதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர். இதே போல் சேலம் பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், உத்தமசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !