உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் நடை அடைப்பு: வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்

கோவில்களில் நடை அடைப்பு: வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களின் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்து சென்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெற்றன. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளும், திருமணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதர் கோவில், மயிலாடுதுறை மயூரநாதர், கோவில் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளிட்ட தேவாரப்பாடல் பெற்ற சிவன் கோவில்களும், 108 திவ்ய தேச பெருமாள் கோவில்களும், நவகிரக தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !