உத்தரகோசமங்கை, திருப்புல்லாணியில் கோயில் நடை அடைப்பால் சிறு வியாபாரிகள் பாதிப்பு
உத்தரகோசமங்கை: கடந்த ஜன., 14 முதல் 18 வரை தொடர்ந்து கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் ஆகியவற்றில் பக்தர்கள், வெளியூர் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஏராளமான கலைநய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சிறு வியாபாரிகள் கூறியதாவது; பெரிய கோயில்களை நம்பி ஏராளமான சிறு கடை வியாபாரிகளும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து வருமானத்திற்கு வழியின்றி பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் எவ்வித வருமானமும் இன்றி முடங்கியுள்ள நிலையில், மீண்டும் கோயில்களில் தொடர்ந்து நடைஅடைப்பால் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருகிறோம் என்றனர். திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதியில் பனை பொருட்களின் மூலமாக செய்யக்கூடிய கலைநயமிக்க பொருட்கள் அதிகளவு உற்பத்தி ஆகியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி தேக்கமடைந்துள்ளது.