அரசு, ஆன்மீக விழாக்களில் குருமகா சன்னிதானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
மயிலாடுதுறை: அரசு ஆன்மீக விழாக்களில் ஆதீனம் குருமகாசன்னிதானம் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதின திருமடத்தில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பல்வேறு கோவில்களை இடிப்பதை அரசு கைவிட வேண்டும். அந்தக் கோவில்களை வேறு இடத்தில் அமைக்க மாற்று இடம் வழங்கியும், பக்தர்களின் நம்பிக்கையை போற்றும் விதமாக பாலாலயம் செய்து வேறு இடத்தில் கோவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் மோசடி மதமாற்றம் செய்வதை தடை செய்யும் விதமாக மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்துள்ளது போல தமிழகத்திலும் மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு மற்றும் கோவில் விழாக்களில் ஆதீன ஐ குருமகா சன்னிதானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கு இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனத்திற்கு அழைப்பு விடுகாமல் அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தியுள்ளது வருத்தமளிக்கிறது. திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்றும், வள்ளுவர் கிறிஸ்துவர், ஞானஸ்தானம் வாங்கி விட்டார் என்றும் தமிழறிஞர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் தெரிவிக்கின்றனர். அதனை கண்டிக்கும் வகையில் திருக்குறள் உலகப் பொதுமறை தான் என்பதை உணர்த்தும் வகையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் திருக்குறள் மாநாடு நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து இச்சந்திப்பின் போது எங்களது கருத்துக்களை தெரிவித்தோம் என்றார் அப்போது மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.