தை அமாவாசை: நவபாஷாணத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
தேவிபட்டினம்: தை அமாவாசையை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில், ஏராளமான பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.
தேவிப்பட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக அமைந்துள்ளது. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆண்டு தோறும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், நவபாஷாணத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, ஏராளமான பக்தர்கள் நவபாஷான கடற்கரையில் குவிந்தனர். முன்னதாக நவபாஷாண கடலில் நீராடிய பக்தர்கள், கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கான வசதிகளை கோவிலை நிர்வகித்து வரும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.