உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர் மீது ஏறி சுவாமியை வழிபட அனுமதி இல்லை

தேர் மீது ஏறி சுவாமியை வழிபட அனுமதி இல்லை

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், தேரின் மீது ஏறி சுவாமியை வழிபட, அனுமதி இல்லை என தீர்மானிக்கப்பட்டது. காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.14ல் கருட சேவையும், 15ல் பெட்டதம்மன் அழைப்பும், 16ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 17ம் தேதி காலை,5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை, 4:00 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கும், தேரோட்டம் நடைபெற உள்ளது. 18ம் தேதி பரிவேட்டையும், 19ல் தேதி தெப்போற்சவம், 20ம் தேதி சந்தான சேவையும் நடைபெற உள்ளது.

தேர்த்திருவிழா குறித்து, காரமடை அரங்கநாதர் கோவிலில், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் விஜயலட்சுமி, கோயில் செயல் அலுவலர் லோகநாதன், நகராட்சி கமிஷனர் பால்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உட்பட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேரின் மீது ஏறி சுவாமியை வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். குறித்த நேரத்தில் தேரோட்டம் நடைபெற வேண்டும். தண்ணீர் சேவை, பந்த சேவை ஆகியவற்றுக்கு தனி வழிகள் ஏற்படுத்த வேண்டும். விழாவிற்கு வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு, உணவு பாதுகாப்பு துறை வாயிலாக சான்று பெற வேண்டும். விழாவில் கட்சிக் கொடிகள் கட்ட கூடாது. தேர் செல்லும் நான்கு வீதிகளிலும், தெப்பக்குளம் முன்பும், தற்காலிக கடைகள் அமைக்க யாருக்கும் அனுமதி இல்லை. தேரோட்ட நாளில் குடில், முட்டி போடுபவர்கள், சன்னைபோடும் பணியாளர்கள், அடையாளம் கண்டு கொள்வதற்கு, தனியாக டீசர்ட் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஸ்தலத்தார், மிராசுதாரர்கள், அரசு அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !