உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எப்போதெல்லாம் புனித நீராடலாம்!

எப்போதெல்லாம் புனித நீராடலாம்!

மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித  நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை,  கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன்.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று  புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. அத்தினமே மகாமகம். மாசி மாதத்தில் மாசி  மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில்  தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழுநிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில்  தீர்த்தவாரி நடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும்  வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா. ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின்  ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால்  உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம்  ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர்,  திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !