உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக சுவாமி சிலைகள் மற்றும் புத்த மதம் தொடர்பான ஆவண குறிப்பு பேழைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில், காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியம் என்ற கலை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது.

திடீர் சோதனை: இங்கு, தொன்மையான பஞ்சலோக சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு ரகசிய விசாரணை நடந்து வந்தது. கலை பொருட்கள் விற்பனை செய்யம் நிலையத்தையும் கண்காணித்து வந்தனர். அங்கு பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததும், திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பார்சல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு நடராஜர் சிலைகள்; 1 அடி உயரம் உள்ள கிருஷ்ணர் சிலை மற்றும் கையெழுத்து பிரதியாக, புத்த மதம் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய, 11 பேழைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணை: இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று போலீசார் கூறினர். சிலைகள் மற்றும் பேழைகளின் தொன்மை குறித்து அறிய, மத்திய தொல்லியல் துறை நிபுணர்களின் உதவியை நாடி உள்ளனர். இந்த விற்பனை மையத்தை சேர்ந்த குர்ஷித் அகமது, 54, முஸ்தாக் அகமது, 59, ஆகியோரை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். மேலும், இதன் பின்னணியில் இருப்போர் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !