உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, 1000 பூ தட்டுகளில் இருந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவின் முன்னோட்டமாக, ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மாலை 6:00 மணி முதல் பரமக்குடி நகரின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, பூத்தட்டுகள் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. மேலும் கரகாட்டம், கிராமிய கச்சேரிகள், நடன நாட்டியம் என நடந்தன. தொடர்ந்து இரவு 9:00 மணி முதல் பரமக்குடி ஆயிரவைசிய சபை உட்பட அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பூ தட்டுக்கள் மேளதாளம் முழங்க சக்தி கோஷத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இரவு 12:00 மணிக்கு மேல் மூலவர் அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, தாமரை என ஒன்றன் கீழ் ஒன்றாக அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் பூ அலங்காரம் கலைக்கப்பட்டு, பாலபிஷேகம், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் பூ பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !