உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரியில் இன்று சிவாலய ஓட்டம்

குமரியில் இன்று சிவாலய ஓட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சிவராத்திரியை ஒட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் நேற்று விடிய விடிய ஓடி சிவராத்திரியன்று குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் 100 கி.மீ. ஓடிச்சென்று 12 சிவாலயங்களில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியான மார்ச் 1ல் 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடக்கிறது. சிவராத்திரியன்று இம்மாவட்டத்தில் கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவில் சுமார் 80 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றியோடு, திருநட்டாலம் சிவன் கோயில்களில் பக்தர்கள் ஓடியும், வாகனங்களிலும் சென்றும் வழிபடுவர். காவி உடை தரித்து கையில் விசிறி, இடுப்பில் திருநீற்று பையுடன் கோபாலா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி பக்தர்கள் செல்கின்றனர். அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழா தத்துவம்: மனித தலையும், புலி உடலும் கொண்டவர் புருஷா மிருகம் என்ற சிவபக்தர். சிவனைத் தவிர வேறு இறைவனை ஏற்கமாட்டார்.ஹரியும், ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த பகவான் கிருஷ்ணன் விரும்பினார். பீமனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி சென்று புருஷா மிருகத்திடம் பால் கேட்குமாறும், கோவிந்த நாமத்தை கேட்டதும் புருஷா மிருகம் தாக்க வரும், அப்போது ஒவ்வொரு ருத்ராட்சமாக கீழே போடு, அது லிங்கமாக மாறும். சிவ பக்தரான புருஷா மிருகம் அதை வழிபாடு செய்து தான் அங்கிருந்து விலகும். இவ்வாறு 11 ருத்ராட்சம் முடிந்து 12வது ருத்ராட்சம் விழும் இடத்தில் நானும் சிவனும் இணைந்து காட்சியளிப்போம், என்று கூறினார். பீமனும் அவ்வாறே செய்தான். முதல் ருத்ராட்சம் விழுந்த இடம் முஞ்சிறை அருகே திருமலை. தொடர்ந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றியோடு உள்ளிட்ட இடங்களில் ருத்ராட்சம் விழுந்த இடங்களில் சிவாலயங்கள் உருவாகின. கடைசி ருத்ராட்சம் விழுந்த இடமான நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கர நாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தினார்.

ஓட்டம் துவக்கம்: சிவனும், விஷ்ணுவும் ஒன்று, அகந்தை கூடாது என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த சிவாலய ஓட்டம் நடக்கிறது. மாலை அணிந்து விரதம் இருந்து, காவி உடை அணிந்து, கையில் விசிறி, இடுப்பில் திருநீற்று பையுடன் பக்தர்கள் ஓட்டமும் நடையுமாக செல்வர்.அந்த சிவாலய ஓட்டம் பகல் முஞ்சிறை திருமலையில் இருந்து துவங்கியது. வாகனங்களில் செல்பவர்கள் இன்று அதிகாலை இங்கிருந்து தொடங்கி இரவு நட்டாலத்தில் நிறைவு செய்வர்.இதற்காக குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழிகளில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !