மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலை ஏற குவியும் பக்தர்கள்
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலையொட்டியுள்ள, மலைத்தொடரில், 7வது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, மார்ச் முதல் மே மாதம் வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்தாண்டு, நேற்று இரவு முதல் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும், 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோர், 7வது மலையில் உள்ள ஈசனை தரிசித்து வந்துள்ளனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முதல் மலை ஏற பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மலை ஏறும் பக்தர்கள், மலைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்லாமல் தடுக்க, கோவில் வளாகத்தில், வனத்துறையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து, பக்தர்களின் பைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே மலை ஏற அனுமதித்து வருகின்றனர். மகா சிவராத்திரி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏற வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கோவில் நிர்வாகம் சார்பில், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.