மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
கம்பம்: க.புதுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 15) நடைபெறுகிறது. சர்வ மதத்தினரும் பங்கேற்பதால் கிராமம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோயில் பழமையானதும், பிரசித்திபெற்றதுமாகும்.இந்த கோயில் விழா கிராம மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். புதுப்பட்டி மட்டுமல்லாது, காக்கில்சிக்கையன்பட்டி, அனுமந்தன்பட்டி போன்ற கிராமங்களில் வசிப்பவர்களும் இந்த கோயில் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.கோயில் திருப்பணிகள் நடைபெற்று, மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளியன்று துவங்கியது. யாகசாலை பூஜைகள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. நாளை (ஜூலை 15) காலை 10.30 மேல் 12 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் சர்வ மதத்தினரும் பங்கேற்பதால், கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது. கிராமத்தில் வசிக்கும் அனைவரும் விரதம் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஐகோர்ட் நீதிபதி முருகேசன் முன்னிலையில் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை அனைத்து சமூகத்தினரும் உள்ள விழாக் கமிட்டி செய்துள்ளது.