மு.க., புதூரில் தேர் திருவிழா பக்தர்கள் பரவசத்துடன் வடம்பிடிப்பு
சூலூர்: முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது.
சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவில் பழமையானது. இங்கு, சிவராத்திரியை ஒட்டி, குண்டம் மற்றும் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு பள்ளைய பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று காலை, குண்டத்துக்கு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பக்தியுடன் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இருகூர் அங்காளம்மன் கோவில், சூலூர் கிழக்கு அங்காளம்மன் கோவில்களில், குண்டம் திருவிழா நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபாடு செய்தனர்.