பாரம்பரியம் மாறாமல் காமன் கூத்து விழா: பத்தர்கள் பரவசம்
கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில், காமன் கூத்து விழா, விடிய விடிய பாரம்பரியம் மாறாமல் நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பங்குனி மாதத்தில், காமன் கூத்து விழா 30 ஆண்டுகளாக பாராம்பரியம் மாறாமல் நடந்து வருகிறது. இதில், தன் தவத்தை கலைக்கும், மன்மதனை சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் கதையை, பாரம்பரியம் மாறாமல், நடத்தி வருகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான விழா பிப்., 15ல் துவங்கியது. விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று இரவு நடந்தது. துவக்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து, ரதி - மன்மதன் திருமணம்; மொய் விருந்துபசாரம் நடந்தன. நள்ளிரவு 2:00 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, தூதுவன் வருகை தட்சன் யாகம்; வீரபத்திரன் வருகை; தட்சன் வதைப்படலம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு எமன் பாசக்கயிற்றுடன் காளையன் சிங்கிலி வருகை நிகழ்ச்சிகள் நடந்தது. அதிகாலை 5:45 மணிக்கு சிவபெருமான்,நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விடிய விடிய நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.