உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,000 ஆண்டு கோவில்கள் மீண்டும் கணக்கெடுப்பு

1,000 ஆண்டு கோவில்கள் மீண்டும் கணக்கெடுப்பு

சென்னை:ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, புராதனமிக்க கோவில்களின் விபரங்கள்,ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீண்டும் கணக்கெடுக்கப்படுகின்றன.

அறநிலையத் துறை சார்பில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, புராதனமிக்க கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதில், 270 கோவில்கள், 9-15ம் ஆண்டில் கட்டப்பட்டவை என்றும், அவற்றில், 174 கோவில்கள் நல்ல நிலையில் உள்ளன; 96 கோவில்கள் திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்ற விபரம் தெரிய வந்தது.

அதன்பின், ஐந்து ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, புராதனமிக்க கோவில்களின் விபரங்களை சேகரிக்க, அந்தந்த மண்டல இணை கமிஷனருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலின் பெயர், நுாற்றாண்டு விபரம், குடமுழுக்கு நடந்த ஆண்டு, கோவிலின் தற்போதைய நிலை ஆகியவற்றை சேகரித்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, 12 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களை கண்டறிந்து, திருப்பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என, அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !