பரமக்குடி முத்தாலம்மன் பங்குனி விழா: மார்ச் 11ல் கொடியேற்றம்
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 10 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
மார்ச் 11 அன்று காலை கோயில் கொடிமரத்தில் சிங்க கொடியேற்றப்பட்டு, மாலை அம்மன் பூதகி வாகனத்தில் வீதி வலம் வருவார். மார்ச் 14 ல் காலை அம்மன் காளி அலங்காரத்திலும், இரவு ரிஷப வாகன காட்சி நடக்கிறது. அன்று மாலை 5:00 மணிக்கு இரண்டு காளை மாடுகள் பூட்டிய வண்டியில், பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி வரும் வண்டி மாகாளி விழா நடக்கும். தினமும் சிங்க, அன்ன, யானை, கிளி, காமதேனு வாகனத்தில் அம்மன் அருள்பாலிப்பார். மார்ச் 18 இரவு குதிரை வாகன சேவை, மார்ச் 19 ல் காலை தொடங்கி மாலை வரை அக்னிச்சட்டி நேத்திக்கடன், இரவு 8:00 மணிக்கு மின்சார தீப அலங்காரதேரில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் நான்கு மாடவீதிகளில் வலம் வருவார். மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்துடன் வைகையாற்றில் எழுந்தருள்வார். அன்று தீர்த்தவாரி மற்றும் இரவு கொடி இறக்கம் நடைபெறும். மார்ச் 21 காலை 5:00 மணி தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுக்கவுள்ளனர். பகல் 11:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடக்க உள்ளது. இரவு அம்மன் சயன கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் வீதிவலம் வருவார். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் மற்றும் ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.