கனகமகாலட்சுமி தாயார்,பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷனில் பெருமாள், கனகமகாலட்சுமி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.நெல்லை ஜங்ஷன் கெட்வெல் கனகமகாலட்சுமி(தாயார்) கோயிலில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு கன்யா லக்கனத்தில் உற்சவர் பிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை, மழைவேண்டி மாலையில் கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் பெருமாள், தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பழங்கள் மற்றும் தட்சணம் என 32 வகையான சீர்வரிசை பொருட்களுடன் மேளவாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின்னர் பெருமாளுக்கும், தயாருக்கும் நிச்சயதார்த்த வைபவம் நடந்தது. தொடர்ந்து மாப்பிள்ளை உபச்சாரம், பிரவரம் (இருவீட்டு உறவினர்களை அறிமுகப்படுத்துவது) மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் நடந்தது. இதையடுத்து மணமக்களுக்கு திரிஷ்டி கழிப்பு, பூப்பந்து எறிதல் வைபவம் நடந்தது. இதைத்தொடர்ந்து மாங்கல்ய பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு மாங்கல்யம் அணிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தாயாருக்கு பட்டுப்புடவையும், பெருமாளுக்கு பட்டுவேஷ்டியும் அணிவித்து மங்கள ஆரத்தி நடந்தது. 5 சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய சரடு மற்றும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராஜாமணி பட்டாச்சாரியார், சீனிவாசன் மற்றும் பாலாஜி பட்டாச்சாரியார்கள் செய்தனர்.