கணியூர் கோவில்களில் கும்பாபிஷேக விழா : பக்தர்கள் பரவசம்
கருமத்தம்பட்டி: கணியூரில், ஐந்து கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில், விநாயகர், முருகன், மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் பழமையானவை. இக்கோவில்களில், கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. வர்ணம் தீட்டுதல், மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா கடந்த, 11 ம்தேதி காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. முதற்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, நேற்று காலை புனிதநீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 7:00 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.. 8:00 மணிக்கு, விநாயகர், முருகர், மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கொங்கலம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, கும்மியாட்டம், ஊஞ்சப் பாளையம் சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவின் ஒயிலாட்டம், ராயர்பாளையம் வேலவன் காவடி குழுவின் காவடியாட்டம் நடந்தது.