மன்னார் கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்
அம்பாசமுத்திரம்: மன்னார் கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் குலசேகர ஆழ்வார் அவதார தினத்தை முன்னிட்டு நேற்றிரவு ‘கோவிந்தா’ பக்தி கோஷம் முழங்க தெப்ப உற்வசம் கோலாகலமாக நடந்தது.
ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் அரச பதவியை துறந்து, மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயிலில் வேத ராயணரிடம் ரணடைந்து, அவருக்கு பணி விடைகள் செய்து அத்தலத்திலேயே முக்தியடைந்தார். இக்கோயிலில், குலசேகர ஆழ்வார் அவதரித்த மாசி புனர்பூசம் நட்சத்திரமான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. காலையில், உற்சவர் ராஜகோபால சுவாமி, ஆண்டாள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், சுவாமி அம்பாளுடன் குலசேகர ஆழ்வார் சிறப்பு அலங்காரத்தில் 12 முறை தெப்பத்தை வலம் வந்தனர். வீதி உலாவுக்கு பின்பு சுவாமி, அம்பாள், ஆழ்வார் மீண்டும் கோயிலை சென்றடைந்தனர். ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம், செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, ஆழ்வார் திருநகரில் அலுவலர் அஜித் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.