விருத்தாம்பிகை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம்
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்த நிலையில், விருத்தாம்பிகை அம்மன் விமானத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்கள் கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு மாயமானது. போலீசார் விசாரணையில், விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த மனநலம் பாதித்த சந்தோஷ்குமார்,49, என்பவர் கலசங்களை திருடியது தெரிய வந்தது. கலசங்களை மீட்ட போலீசார் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கோவில் நிர்வாகத்திடம் கலசங்களை ஒப்படைத்தனர். அதன்பின் கலசங்களுக்கு பரிகார பூஜைகள் செய்து, கோவில் சிவாச்சாரியார்கள் இணைந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் செய்தனர். காலை 9:30 மணியளவில் புனிதநீர் கலசங்களை சுமந்து வந்து, கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, நீதிபதி மகாலட்சுமி, நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.