உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு

கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு

மயிலாடுதுறை : சீர்காழி அருகே நான்கு சிலைகள் மாயமான வழக்கில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலைகளை மீட்ட சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீஸார் இதுதொடர்பாக கோவில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் மன்னர்சாமி, நல்ல காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. சிலைகள் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளதாகவும், அதனை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் ஏனாக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி. ஜெயந்த் முரளி, ஐஜி. தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சீர்காழி அருகே நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த கோவில் குருக்கள் சூரியமூர்த்தி.75. என்பவரை விசாரணை செய்தபோது நெம்மேலி கோவிலில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் 32 செ.மீ உயரம் உள்ள பிரதோஷ நாயகர், 30 செ.மீ உயரமுள்ள பிரதோஷ நாயகி உலோக சிலையும், இந்து சமய அறநிலையத் துறையினரின் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், இரண்டு சிறிய வெள்ளி விளக்கு, வெள்ளி குடம், சனீஸ்வரன் வெள்ளி கவசம் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த பொருட்களை கைப்பற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் குருக்கள் சூரியமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதையடுத்து நீதிபதி சிலையை கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கவும், குருக்கள் சூரியமூர்த்தியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலையின் மதிப்பு ரூ 2 கோடி எனக்கூறப்படுகிறது. சிலைகள் இரண்டும் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நெம்மேலி கிராமவாசி ஒருவர் கூறுகையில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட பிரதோஷ நாயகி, பிரதோஷ நாயகர் சிலைகள் அதே பகுதியில் உள்ள உத்திராபதியார் கோவிலில் இருந்து, அதனை 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கிராமமக்கள் ஒப்படைத்த போது அது எங்களது சிலை இல்லை என திருப்பி கொடுத்ததால் வேறுவழியின்றி கிராமமக்கள் அந்த சிலையைகோவில் குருக்கள் சூரியமூர்த்தி இடம் கொடுத்து வைத்தனர். மேலும் வெள்ளிக் கவசங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் உபயதாரர்களால் வாங்கி கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அதனை கிராம மக்கள் ஒப்புதலுடன் குருக்கள் சூரியமூர்த்தி தனது வீட்டில் வைத்திருந்தார் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !