உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசவளநாடு கோவிலூரில் பங்குனி உத்திர பெருவிழா: பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்

காசவளநாடு கோவிலூரில் பங்குனி உத்திர பெருவிழா: பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் திருக்கோவிலில்  பங்குனி உத்திர பெருவிழாவில், 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாட்டில் 18 கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது. இந்த கிராமங்களுக்கு ஆன்மிக தலமாக விளங்குவது கோவிலூர். அதன்படி கோவிலூர் கிராமத்தில் ஜெம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி பத்துநாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பிரமோத்சவ விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலை - மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான பங்குனி உத்திர விழாவான நேற்று மூலவர் ஜெம்புகேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. மேலும், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் இடும்பன், முருகன் சன்னதியில் ஏராளமானோர் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து  காலை முதல் மாலை வரை   காசவளநாட்டில் உள்ளடங்கிய 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பங்குனி உத்திரவிழாவினைத் தொடர்ந்து கோவிலூரில் பல்வேறு கிராமத்தினரும், அன்னதானம், நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !