உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா

காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா

புதுச்சேரி: காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தனது உடலில் அலகு குத்திக்கொண்டு கிரேன், பொக்லைனில் தொங்கியபடியும், வாகனங்களை இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்தாண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமி வீதியுலாவும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவ விழா இன்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரேன், பொக்லைன், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றில் அலகு குத்தி தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.  கார், டிப்பர் லாரி, வேன் உள்ளிட்டவற்றை அலகு குத்தி இழுத்து வந்தனர். கிழக்கு கடற்கரைச் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேரோடும் வீதி, பங்களா வீதி வழியாக ஊர்வலம் கோயிலை சென்றடைந்தது. இதேபோல உயரமான கிரேனில் தொங்கியபடி பக்தர்கள், 70 அடி ராஜகோபுரத்துக்கு பாலாபிஷேகம் செய்தனர். இது அனைத்து பக்தர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது. மிகவும் பிரசிதத்திபெற்ற கோவில் என்பதால் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !