உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீவி., ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வருடம் தோறும் பங்குனி உத்திரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடப்பது வழக்கம். இந்த வருடமும் கடந்த மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.

இதனை முன்னிட்டு ஒன்பதாம் திருநாளான நேற்று காலை 10:00 மணிக்கு கோவில் பட்டர்கள், கோட்டைத்தலைவாசல் ரேணுகா தேவி கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு திருக்கல்யாண பட்டுப்புடவை,, ரெங்கமன்னாருக்கு வேஷ்டி, திருமாங்கல்யத்தை பெற்று வந்தனர். பின்னர் கோயிலில் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் தேங்காய் பெறுதல், பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளலும் நடந்தது. மாலை 4 மணிக்கு அங்கமணிகளுடன் ஆண்டாள் வீதி சுற்றி வந்தார். பின்னர் மணவாளமாமுனி சன்னதி வாசலில் ஆண்டாள், ரங்கமன்னார் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இதனையடுத்து ஆண்டாள், ரங்கமன்னார் மனமேடை எழுந்தருளினர். பின்னர் பெரியாழ்வார் முன்னிலையில் இரவு 7:35 மணிக்கு திருக்கல்யாண வைபவத்தை ரகுபட்டர் நடத்தினர். திருக்கல்யாணம் முடிந்த பிறகு ஆண்டாளுக்கு, திருமலை திருப்பதி கோயில் பட்டு சாற்றப்பட்டது. திரளான பக்தர்கள் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !