சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: ஆராட்டுடன் நிறைவு
சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நேற்று பம்பையில் ஆராட்டுடன் நிறைவு பெற்றது. பங்குனி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை இன்று அடைக்கப்படும்.
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் மதியம் 12:30 மணிக்கு உற்சவபலி, இரவு ஸ்ரீபூதபலி, யானை மீது சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது. மார்ச்17 ஒன்பதாம் நாள் விழாவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டையில் சுவாமி எழுந்தருளினார்.அங்கு வேட்டை முடிந்து கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை ஸ்ரீகோயிலுக்கு எழுந்தருளி, உஷபூஜைக்கு பின்னர் சுவாமி யானை மீது சரங்குத்திக்கு எழுந்தருளினார், மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடந்தது.பம்பை நதியின் ஆராட்டுத்துறையில் உற்சவ விக்ரகத்துக்கு பல்வகை அபிேஷகம் நடத்திய பின்னர் தந்திரியும், மேல்சாந்தியும் விக்ரகத்துடன் நதியில் மூழ்கி எழுந்தனர். மாலை 4:00 மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்பட்டது. இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது. பங்குனி மாத பூஜைகள் முடிந்து இன்று இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.