வடபழநி ஆண்டவர் கோவிலில் உற்சவர் மண்டபம் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட உற்சவர் மண்டபத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த கோவில் திருப்பணி வேலைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டதில் உற்சவர் மண்டபமும் ஒன்று. மரத்தாலான மயில் வாகணத்தில் அமர்ந்திருந்த உற்சவர் முருகனுக்கு நிரந்தரமான கல் மண்டபம் கட்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது அந்த கல் மண்டபத்தை தேர் வடிவில் அமைக்கவும் அந்த கல் தேர் மண்டபத்தை இரண்டு யானைகள் சங்கிலி கட்டி இழுத்துச் செல்வது போலவும் வடிவமைக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக பார்த்து பார்த்து செதுக்கியது போல உருவாக்கப்பட்ட கல் தேர் மண்டபம் நேற்று திறக்கப்பட்டது.புதிய மண்டபம் மலர்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சி தந்தது அந்த அழகுக்கு அழகும் கம்பீரமும் சேர்ப்பது போல பழநி ஆண்டவர் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பழநி ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யலாம் என்பதால் பக்தர்கள் திரளாக வருகைதந்து தத்தம் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து மகிழ்ந்தனர் கூடவே கல்தேர் மண்டபத்தின் அழகை தங்கள் குழந்தைகளிடமும் குடும்பத்தினரிடமும் காட்டி மகிழ்ந்தனர்.