ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ராப்பத்து உற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்;விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள், ரெங்கமன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு உட்பிரகாரம் சுற்றி வந்தனர்.அப்போது சொர்க்கவாசல் மண்டபத்தில் ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்க காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் பெரிய பெருமாளும், அதனை தொடர்ந்து ஆண்டாள், ரெங்க மன்னாரும் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அப்போது கோவிந்தா, கோபாலா முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாட வீதிகள் வழியாக வடபத்ரசயனர் சன்னதி ராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாள் ஆழ்வார்கள் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர்,எம்.எல்.ஏ.மான்ராஜ், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், எஸ். பி. கண்ணன், அறநிலையத்துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
ராப்பத்து உற்ஸவம் துவக்கம்: இன்று முதல் ஜனவரி 9 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படாகி, மாடவீதி வழியாக பெரியபெருமாள் சன்னதிக்கு வந்தடைகிறார். அங்கு திருமஞ்சனம், கைத்தல சேவை, திருவாராதனம், அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், பொது ஜன சேவை நடக்கிறது. பின்னர் அதிகாலை 5:30 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானம் சென்றடைகிறார்.