உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இன்று ஆடி அமாவாசை

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இன்று ஆடி அமாவாசை

விக்கிரமசிங்கபுரம்: காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று நடக்கிறது.ஆதார நிலையில் மூலாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய ஸ்தலமாகும். அதாவது கைலாயமலையில் சிவபெருமான் - பார்வதி திருமணத்தின் போது சிவபெருமானின் உத்தரவை ஏற்று தென்திசையில் இருக்கும் பொதிகை மலைக்கு அகஸ்தியர் பயணம் செய்தார். அப்போது சொரிமுத்து அய்யனார் கோயில் தற்போது இருக்கும் இந்த ஸ்தலத்தில் தங்கி தாமிரபரணி ஆற்றில் குளித்து முடித்து யோக நித்திரையில் இருந்தார். அவ்வாறு இருக்கும்போது ஜோதி ஒன்று தோன்றி பிரம்மராட்சசி, பேச்சி போன்ற மூர்த்திகளுடனும் சாஸ்தாவானவர் மகாலிங்கம் என்ற பெயர் தாங்கி சிவபெருமானை வணங்கி கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது.அன்றைய தினம் ஆடி அமாவாசை நாளாக இருந்தது. இதே நாளில் அதாவது ஆடி அமாவாசை அன்று இத்தலத்திற்கு வந்து நீராடி மாமிசம், மது எதுவும் சாப்பிடாமல் அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளை வழிபட்டு வருபவர்களுக்கு அவர்களின் துன்பங்கள் நீங்கி சகல பாக்கியங்களும் கிடைக்க வேண்டுமென அகஸ்தியர் பகவானை பிரார்தனை செய்து வரம் வாங்கினார்.

அந்த நேரத்தில் ஆகாயத்திலிருந்து மலர்கள் பொழிந்ததால் மலர் சொரிமுத்து அய்யனார் என்று பெயர் பெற்று மகாலிங்கம், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசல்பூதம், மேலவாசல் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி பெரியசாமி, பாதாள பூதம் உக்கிரகாளி, கரடிமாடன், பிரம்மரட்சசி, பேச்சி, சுடலைமாடன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் காட்சி கொடுத்து சாஸ்தா மறைந்தார்.பல ஆண்டுகளுக்குபின் இந்த ஸ்தலத்தின் மகிமை வெளியில் தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில் பாண்டிய நாட்டிலிருந்து சேரநாட்டிற்கு பண்டமாற்றம் மூலம் வாணிபம் செய்து வரும்போது மாட்டு வண்டி செல்லும் வழியில் மாடுகளின் கால் தொடர்ந்து ஒரு கல்லின் மேல்பட்டு அக்கல்லில் இருந்து ரத்தம் வரத்துவங்கியது. அங்கு இருந்தவர்கள் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் அக்கல்லை பார்த்து கொண்டிருக்கும்போது அசரீரீ ஒன்று கேட்டது. அதாவது முன்பு ஒரு காலத்தில் இந்த ஸ்தலம் அகத்தியரின் ஞானதிருஷ்டியால் உரைபட்ட புண்ணிய ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் ஆகம விதிகளுக்குட்பட்டு கோயில்கட்டி வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று தெரிவித்தது.அகத்தியரின் ஞானதிருஷ்டியில் தெரிந்து பின்னர் இங்கு கோயில் கட்டி பக்தர்கள் வணங்கிய நாளிலிருந்து ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டில் கடந்த 8ம் தேதி கோயில் வளாகத்தில் கால்நாட்டுதல் வைபவம் நடந்தது. இன்று நடக்கும் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக நெல்லை, மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோயில் வளாகத்தில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், மாலை சுமார் 6 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !