ஆடி முதல் செவ்வாய் அவ்வையாரம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபாடு!
நாகர்கோவில்: ஆடி முதல் செவ்வாயை ஒட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்று கொழுக்கட்டை அவித்து அவ்வையாருக்கு படைத்து வணங்கிச் செல்லும் சிறப்பு திருவிழா நேற்று நடந்தது.புராண கால முக்கியத்துவம் பெற்றவர் அவ்வை பிராட்டி. தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டை தமிழ் கூறும் நல்லுலகம் இன்றளவும் போற்றி வருகிறது. அவ்வையாரை பெண் கடவுளாக சித்தரித்து வழிபடுவது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், வேதாரண்யம் வட்டத்தில் துளசியாப்பட்டினத்திலும் உள்ளது. இருப்பினும் அவ்வையாருக்கென தனியாக கோயில் உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் தாழக்குடி-செண்பகராமன்புதூர் ரோட்டில் கனகமூலம் புதுகுடியிருப்பு என்ற இடத்தில் உள்ள நெல்லிமடம் பகுதியில் "அவ்வையாரம்மன் கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வையாருக்கு இங்கு கோயில் எழுப்பப் பட்டதாக கூறுகின்றனர்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து பகவதிப் பெருமாள் என்பவர் காசிக்கு சென்றதாகவும், அவர் காசியில் இருந்து திரும்பி வரும்போது அவருடன் வந்த மூதாட்டி தற்போது கோயில் எழுப்பப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்த நிலையில் முக்தியடைந்ததாகவும், அவரே அவ்வையாரம்மன் என்றும் கூறப்படுகிறது.அழகில் சிறந்த அவ்வைக்கு விநாயகர் மீது மாசற்ற பற்று இருந்தது. அதே நேரத்தில் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த அவரை பக்கத்து நாட்டு மன்னர்கள் திருமணம் செய்ய போட்டி போட்டதாகவும், இதனால் வெறுத்துப்போன அவ்வை, தன்னை முதிர்ச்சி அடைந்த பெண்ணாக மாற்ற விநாயகரிடம் வேண்டினார். இதனை தொடர்ந்து அவர் முன்தோன்றிய யானை ஒன்று அவர் மீது பூச்சொரிய, அழகி அவ்வை, "பிராட்டியானார் என்ற கருத்தும் நிலவுகிறது.இப்பகுதியில் அவ்வையாருக்கென தனிக் கோயில் எழுப்பப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றபோதிலும் ஆடி மாதம் அவ்வையாரம்மன் கோயில் திருவிழா பிரபலம் ஆகும்.
ஆடி செவ்வாய்: ஆடிச் செவ்வாய் தினத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் இருந்தும் பெண்கள் கோயிலுக்கு வந்து கொழுக்கட்டை, கூழ் வைத்து அவ்வையாரம்மனுக்கு படையல் செய்து ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவாக நடக்க வேண்டும். திருமணமான பெண்களுக்கு பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆடி மாதம் செவ்வாய்க் கிழமைகளில் கன்னிப் பெண்களை உடன் அழைத்து வந்து பச்சரிசி மாவு, சர்க்கரை, தேங்காய், சுக்கு, ஏலம் சேர்த்து உருண்டை பிடித்து அவித்த கொழுக்கட்டை மற்றும் கூழ் வைத்து சமைத்த இடத்தில் இருந்தபடியே அவ்வையாரம்மனை வணங்கி வீடுகளுக்கு எடுத்து சென்று கொழுக்கட்டைகளை உண்டு மகிழ்ந்து செல்வது வழக்கமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தக் கோயிலுக்கு ஆண்கள் வரமாட்டார்கள். அப்போது உப்பில்லாத சிறு கொழுக்கட்டையும் இங்கு அவித்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து பெண்கள் வீடுகளுக்கு எடுத்து செல்வர்.
இந்த கொழுக்கட்டையை ஆண்கள் யாருக்கும் கொடுக்காமல் பெண்கள் மட்டுமே சாப்பிடுவர். ஆண் வாடையை விரும்பாத அவ்வையாரம்மனுக்கு பிடித்த கொழுக்கட்டை இது என்பதால் அவருக்கு படைப்பதாக ஒரு கருத்தும் உண்டு. இந்த ஆண்டு ஆடி மாத முதல் செவ்வாய் கிழமை நேற்று நடந்தது. இதனையொட்டி காலையில் அவ்வையாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பகல் அலங்கார தீபாராதனை, மாலை தீபாராதனை நடந்தது. அவ்வையாரம்மன் கோயிலுக்கு மேலே மயிலாடும் குன்றம் என்ற பகுதியில் குமரகுருபரசுவாமி (முருகன் சன்னிதி) கோயிலும் உள்ளது. இங்கும் அவ்வையாரம்மன் கோயிலுக்கு வந்த பெண்கள் முருகனை தரிசித்து சென்றனர். அதுபோன்று குமரி மாவட்டத்தில் பெருமை வாய்ந்த அம்மன் கோயிலான சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், மண்டைகாடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் முத்தாரம்மன்கோயில், கோட்டாறு குலசேகரநங்கையம்மன் கோயில், காட்டுபுதூர் கள்ளிமூட்டு இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் வண்டிமலச்சியம்மன் கோயில், கருங்காளியம்மன் கோயில், கொட்டாரம் சந்தனமாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், சொற்பொழிவுகள், அன்னதானம் ஆகியன நடந்தது.